Thursday, November 25, 2010

மழையும் மலையும்!!கோவைக் குற்றாலம், திருமூர்த்தி பஞ்சலிங்க அருவி, மூணாறு... எனக்குத் தெரிஞ்சே ஒரு ஆயிரம் பேராவது இது போல ஏமாந்து இருப்பாய்ங்க. பொன்னாலம்மன் சோலையில இருக்கிற எங்க சின்னம்மாவிங்க தோட்டத்துக்கு போறப்பவெல்லாம், இது போல எதோ ஒரு சேதி வந்துட்டே இருக்கும்.

அரசும் கொஞ்சம் சிரத்தையோட இருக்கலாம்... அதுக்கும் மேல, போற நம்ம ஆட்கள், உள்ளூர்வாசிகளைக் கேட்டுட்டு மலை மேல போறது உசிதம்.. மலையும் மழையும் சுலுவுல ஆளை ஏமாத்திடும்னு கிராமத்து வெள்ளந்திக சொல்றது சும்மாவா, என்ன?!.

Monday, November 22, 2010

தோற்கிறேன்!

தோற்றுக் கொண்டு இருக்கிறேன்!
தெரிந்தே
நான் தோற்றுக் கொண்டு இருக்கிறேன்!!

பாதுகாப்பிசம்
நான் தெரிவு செய்த பாதை
நவீன உலகில்
எவரும் மதியாத பாதை...
தோற்றுக் கொண்டு இருக்கிறேன்!
தெரிந்தே
நான் தோற்றுக் கொண்டு இருக்கிறேன்!!

இருப்பின் உறுதி அவசியம் என்றேன்
விடுதலைக்கு எதிரானவனாய்
ஆக்கப்பட்டேன்;
தோற்றுக் கொண்டு இருக்கிறேன்!
தெரிந்தே
நான் தோற்றுக் கொண்டு இருக்கிறேன்!!

அடிப்படையே முதல் என்றேன்
முன்னேற்றத்தின் எதிரியாய்ச்
சித்தரிக்கப்பட்டேன்;
தோற்றுக் கொண்டு இருக்கிறேன்!
தெரிந்தே
நான் தோற்றுக் கொண்டு இருக்கிறேன்!!

வழுவைக் களையவல்லது பழைமை என்றேன்
புதுமையின் தடைக்கல்லென
முன்னிறுத்தப்பட்டேன்;
தோற்றுக் கொண்டு இருக்கிறேன்!
தெரிந்தே
நான் தோற்றுக் கொண்டு இருக்கிறேன்!!

ஆம்; தோற்றுக் கொண்டு இருக்கிறேன்!
தெரிந்தே
நான் தோற்றுக் கொண்டு இருக்கிறேன்!!
தாராளமயத்தின் தாக்கத்தில்
தாக்குப்பிடிக்காது
தோற்றுக் கொண்டு இருக்கிறேன்!

நான் இறந்த பிறகாவது
இருப்பிற்கான உறுதியின் அவசியம்
மெய்ப்படும் எனும் நினைப்பில்
தெரிந்தே தோற்றுக் கொண்டு இருக்கிறேன்!
தெரிந்தே
நான் தோற்றுக் கொண்டு இருக்கிறேன்!!

விதைப்பவன் வீழ்ந்திடினும்
விதைகள் எழும்!!

Sunday, November 7, 2010

நான் யார்?

 • அணுகுவதற்கு இலகுவாய் இருப்பது எளிமைக்கு முதல்படி என நினைப்பவன்.
 • பழையதன்றி, புதியன உயிர்ப்பதில்லை என்பதில் நம்பிக்கை கொண்டவன்.
 • பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாதோர் எனும் அக்கப்போரில் நாட்டமற்றவன்.
 • தமிழில் நாட்டம் கொண்டவன். தமிழ் எழுத்துகள் கொண்டு, தமிழ்ச் சொற்களை எழுத முனைபவன்.
 • சுட்டுவதில் தன்னைச் சுட்டுவதற்கான காரணிகளும் உயிர்க்கிறது என்பதில் ஒப்புமை கொண்டவன்.
 • அறம் கட்டுடைக்கப்படும் போது, நீட்சிகள் எங்கோ, எதோ ஒரு புள்ளியில் கேட்டுக்கு வழி வகுக்கும் என்பதில் இசைந்தவன்.
 • ஒரு சூழலில் பெண்பால் உயர்வானது; பிறிதானதொரு சூழலில் ஆண்பால் உயர்வானது என்பதில் பற்றுடையவன். த்த்தம் தனித்தன்மையை அவை இரண்டும் கொண்டிருக்கின்றன என நம்புபவன்.
 • ஒட்டு மொத்த சமத்துவம் சாத்தியக் கூறுகள் அற்றது; பிரிந்த மணிகள் மாலையாகுமே தவிர, மாலையே மணியாவது இல என்பதில் உறுதி உடையவன்.
 • இணக்கமும் தனித்துவமும் வேறு வேறானவை. அதே வேளையில், அவை இரண்டும் உடலும் உயிரும் போன்றவை என ஏற்றுக்கொண்டவன்.
 • தமிழ் மொழி, பண்பாடு பேணுபவன் எவராயினும் அவர் தமிழர் என்பதில் பற்றுக் கொண்டவன்.
 • சாதிக் கணக்கெடுப்பில் உடன்பாடற்றவன்.
 • இட ஒதுக்கீடு என்பது படிப்படியாக இல்லாதிருத்தல் வேண்டும் என எண்ணுபவன்.
 • விவாதம் என்பது வினவுதலும் விடையளித்தலுமே அன்றி, வெட்டிப் பேசுதல் அன்று என எண்ணுபவன்.

Friday, October 15, 2010

தமிழ்நாட்டு மக்களுக்கு விடியல்!!!

சென்னை: தமிழக சட்டசபை உறுப்பினர்கள் அனைவருக்கும் இமெயில்கள் முகவரிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்தை முதல்வர் கருணாநிதி தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் உள்ள 234 தொகுதி எம்.எல்.ஏக்களுக்குமான இந்த அதிகாரப்பூர்வ இமெயில் முகவரிகளை தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத்துறை உருவாக்கிக் கொடுத்துள்ளது. இதை இன்று வீடியோ கான்பரன்சிங் மூலமாக முதல்வர் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் முதல்வர் பேசுகையில், இந்த இமெயில் முகவரிகள் மூலம், மக்கள் பிரதிநிதிகள் மேலும் திறம்பட செயல்பட முடியும் என்று அவர் தெரிவித்தார்.

ஏன்யா, இது ஒரு செய்தின்னு போட்டு தமிழக மானத்தை வாங்குறீங்க?? மின்னஞ்சல் முகவரி கொடுக்கிறது ஒரு பெரிய குதிரைக் கொம்பாயா?? உலகம் எங்க இருக்கு? நாம எங்க இருக்கோம்??

Thursday, August 5, 2010

சேவல்

a

Wednesday, August 4, 2010

ஆக்கப்பூட்டு

ஆக்கப்பூட்டு என்பது, ஆங்கிலத்தில் knuckle joint எனும் சொல்லின் தமிழ்ச் சொல் ஆகும்.


Tuesday, June 29, 2010

தமிழ்ச் சேவகன் சத்யா!ஆற்றுவார் ஆற்றல் பணிதல், அதுசான்றோர் மாற்றாரை மாற்றும் படை! இக்குறளுக்கு இலக்கணமானவர்; இளகிய மனதுக்குச் சொந்தக்காரர்; அதீத நகைச்சுவை உணர்வும் கொண்டவர்; பணிவாகப் பேசி அடுத்தவர் மனதைக் கொள்ளை கொள்ளும் அதிசய மனிதர் இவர்.

ஒன்பது மாதங்களுக்கு முன்னர், ஒரு மாலை நேரத்தில் எம்மை அழைத்து அளவளாவிக் கொண்டு இருந்தார். அதனூடாக, வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை மற்றும் பேரவையின் திருவிழாவைப் பற்றியும் நினைவு கூர்ந்துவிட்டு, ”தன்னார்வத் தொண்டராக வேலை செய்ய ஆயத்தமாக இருக்கிறேன். யாரை அணுக வேண்டும்?” என்று வினவினார். அன்றைய நாள் தொட்டு இன்று வரையிலும், தமிழர்களுக்காகவும் தமிழ்ச்சங்கப் பேரவைக்காகவும், அல்லென்றும் எல்லென்றும் பாராமல் உழைத்து வருபவர்தான் சின்னப்பையன் என்கிற சத்யா அவர்கள்.

கனெக்டிக்கெட் மாகாணம், வாட்டர்பெரியில் நடக்க இருக்கும் தமிழ்த் திருவிழா ஏற்பாடுகளில் மூழ்கி இருந்த அவரிடம், நாம் கண்ட செவ்வியின் சாராம்சம்தான் இது.

வணக்கம் சத்யா! விழா ஏற்பாடுகளில் வெகுமும்முரமாய் இருக்கிறீர்கள். தங்கள் மனநிலை இப்போது எப்படி இருக்கிறது??

(வழமையான நகையுனூடே தொடர்கிறார்) வணக்கம், வணக்கம் பழமைபேசி! ஆமாம், இந்த ஏழு எட்டு மாத உழைப்பின் பலனை அறுவடை செய்யும் தருணத்தில் இருக்கிறோம். மகிழ்வாய் இருக்கிறேன். கடந்த எட்டு மாத கால அனுபவங்களை ஒரு நூலாகவே எழுதலாம். அந்த அளவிற்கு, முற்றிலும் மாறுபட்ட, மேலான அனுபவத்தை அடைந்த உணர்வுதான் மேலிடுகிறது.

மகிழ்ச்சி சத்யா! திருவிழாவுக்கான உங்களது கடுமையான உழைப்பு நன்றாகவே தெரிகிறது. என்றாலும், குழப்பங்கள், ஏமாற்றங்கள், அயர்ச்சி, சலிப்பு, விரக்தி முதலான உணர்வுகளும் உங்களை நிச்சயம் ஆட்கொண்டிருக்கும். அத்தருணத்தில், “இது எல்லாம் ஒரு பொழப்பா” என நினைத்த்து உண்டா??

இல்லவே இல்லை. நான் சார்ந்த சமூகத்திற்குப் பணி செய்வதை என் கடமையாகக் கருதினேன். கூடவே, இவ்வாய்ப்பு எனக்குக் கிடைத்தமையை எண்ணிப் பெருமையடையவும் செய்தேன். என் ஈடுபாட்டை அறிந்த அமெரிக்க நண்பர்கள், என்னைப் பாராட்டும் போது பெருமிதம் கொண்டேன் என்பதும் குறிப்பிட்த்தக்கது.

அமெரிக்க நண்பர்களைப் பற்றிக் குறிப்பிட்டீர்கள். அவர்களைப் போல, சில தமிழ் நண்பர்களும் கடுமையான விமர்சனத்தை வைத்திருப்பார்களே??

ஆமாம். சொன்னாலும் புரிந்து கொள்ளும் மனநிலையில் அவர்கள் இல்லை. தமிழர்களுக்கென்று ஒரு அமைப்பு; அதற்குப் பங்களிப்புச் செய்வது நம் கடமை. பங்களிப்புச் செய்து கொண்டு விமர்சனம் செய்யலாம். எதுவுமே செய்யாமல், புறம் பேசுவது சரியானது அல்ல என்பதே என் கருத்து.

சத்யா, பேரவைக்கும் தமிழ்ச் சங்கத்திற்கும் முன் அறிமுகம் இல்லாதவர் நீங்கள். அப்படியான சூழலில், தமிழ்ச் சங்கம் மற்றும் பேரவையின் முன்னோடிகள் உங்களை நட்த்திய விதம் பற்றிக் கூற முடியுமா??

அஃகஃகா! எட்டு, ஒன்பது மாதம் தொடர்ந்து வேலை செய்வதில் இருந்தே தெரிந்து கொள்ள முடியவில்லையா? மிகவும் நல்லபடியாக, சகோதர சகோதரிகள் போலவே நட்த்தினார்கள். ஏற்றத் தாழ்வு என்பது எல்லாம் அறவே இல்லை. இனியும் சொல்லப் போனால், எனக்கென்று ஒரு தனியிடம் கொடுக்கப்பட்டு இருப்பது போலவே உணர்கிறேன்.

அப்படியானால், மற்றவர்களுக்கு??

என்ன கேள்வி இது?? தனியிடம் என்றால், எனக்கான இடம் அது. அது போலவே மற்றவர்களுக்கும் கிடைத்து இருக்காமலா போயிருக்கும்?? இன்னுஞ் சொல்லப் போனால், என்னைவிட மிக அதிகமாக உழைப்பவர்கள் நிறைய இங்கு இருக்கிறார்கள்.

பேரவையின் சிறப்பு என்னவென நீங்கள் கருதுகிறீர்கள்?

புலம் பெயர்ந்த நாட்டிலே, வட அமெரிக்காவிலே இருக்கிற தமிழர்களை எல்லாம் ஒரு குடையின் கீழ்க் கொண்டு வரும் ஒரு கட்டமைப்பு. தமிழர்களாகிய நாம் எல்லோருமே அதை வலுப் பெறச் செய்ய வேண்டும் என்பதே எம் ஆவல்.

அதிகார மையம் போன்று யாராவது செயல்படுகிறார்களா? ஆமெனில், அதைப் பற்றி விரிவாக்க் கூற இயலுமா??

என்ன இது? நல்ல கேள்வியே உமக்குக் கேட்கத் தெரியாதா?? அப்படி எல்லாம் ஒன்றுமே கிடையாது. நீங்கள் தொடர்பு ஏற்படுத்திக் கொடுத்த நாளில் இருந்தே, நான் விழா ஒருங்கிணைப்பாளருடைய வழிகாட்டுதலில்தான் வேலை செய்து வருகிறேன். எங்கள் ஊரைச் சார்ந்த முனைவர் பழனி சுந்தரம் அவர்கள்தான், அடுத்த இரு ஆண்டுகளுக்குத் தலைவர். ஆகவே, அவருடன் சேர்ந்து அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு அவர் பின்னாலேயே நானும் பயணிப்பேன்.

பேரவைப் பணிகளில் உங்களை நீங்கள் ஈடுபடுத்திக் கொள்ளு முன்னரே, பேரவையைப் பற்றித் தெரிந்து வைத்திருந்தீர்களா??

இல்லை. சென்ற ஆண்டு விழாவின் போது, உங்களுடைய வலைப்பூவை அவதானித்திருந்தேன். அதுதான் எனக்குக் கிடைத்த அறிமுகம்.

அப்படியானால், பேரவையின் மீது வைக்கும் விமர்சனங்கள் சரியானதாக இருந்து, உமக்கு அவை பற்றிய விபரங்கள் தெரியாமலும் இருக்கலாம் இல்லையா??

விமர்சனங்கள் சரியானதாக இல்லாமலும் இருக்கலாம் இல்லையா? இந்த எட்டுமாத காலமாக அருகில் இருந்து பார்க்கிறேன். அப்படியெல்லாம் எதுவும் என் கண்களுக்குப் புலப்படவில்லை. அதற்கும் மேலாக, தெரிந்து கொள்வதில் எனக்கு நாட்டமும் இல்லை. தமிழர்கள் ஒன்று கூடி, விழாவைக் கொண்டாட வேண்டும். கல்வி மற்றும் சமூகப் பணிகளைத் தொடர்ந்து செய்ய வேண்டும். அவ்வளவுதான் என் மனதில் தோன்றுவது.

இப்படி தினமும் நள்ளிரவு வரை உழைக்கிறீர்களே? குடும்பத்தாரின் அணுகுமுறை எப்படி இருக்கிறது எனச் சொல்ல முடியுமா??

துவக்கத்தில் விரக்தியாகத்தான் பேசினார்கள். பெரும் குழுவாகப் பலரும் கூடி வேலை செய்யத் துவங்கியதைக் கண்டதும், விரக்தியானது மறைந்து ஒரு புரிந்துணர்வு வந்து விட்டதாக உணர்கிறேன் நான்.

சத்யா, உங்களைப் பேரவைக்கும் மற்றவர்களுக்கும் அறிமுகப்படுத்தி வைத்த்தில் எனக்குப் பெருமை; தமிழர்களுக்குப் பெருமை; குறிப்பாக, பதிவுலகுக்குப் பெருமை! உங்கள் வாழ்வு சிறக்க வாழ்த்துகள்!! என்னிடம் கேட்க வேண்டியது ஏதாவது உள்ளனவா??

நீங்கள் நிறைய இலக்கிய நூல்கள் படித்து வருவதாக அறிகிறேன். இளைஞர்களுக்கு இதனால் ஏதாவது பயன் உண்டா எனச் சொல்லுங்கள்.

மொழி வளம் கூடும். மனம் பண்படையும். கூடவே வாசிப்பனுபவம் பெருகிப் பேரின்பம் கிட்டும்; கிட்டுகிறது என்பதுதான் என் நிலை. நன்றி சத்யா! உங்கள் ஊர்த் திருவிழா சிறக்க எம் நல்வாழ்த்துகள்!!

நீங்களும் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறீர்கள். அதற்கும் மேலாக, உங்களுடைய பதிவுலகப் பணி சிறக்க என் வாழ்த்துகள்!

வேர்கள் தமிழில்! விழுதுகள் உலகெங்கும்!!

Thursday, April 8, 2010

இயற்கையும் மானுட மகோன்னதமும்!!

Thursday, March 4, 2010

அமெரிக்கா: செந்தமிழ்க் காவலர் திரு.சி.இலக்குவனார் நூற்றாண்டு விழா அழைப்புபுறநானூற்றுக் கருத்தரங்கம்
செந்தமிழ்க் காவலர் திரு.சி.இலக்குவனார் நூற்றாண்டு விழா


தமிழ் இலக்கிய ஆய்வுக்கூட்டம், வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை மற்றும் வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கம் இணைந்து நடத்தும் இரண்டாவது புறநானூற்றுக் கருத்தரங்கமும், செந்தமிழ்க் காவலர் திரு.சி.இலக்குவனார் அவர்களின் நூற்றாண்டு விழாவும், எதிர்வரும் மார்ச் 14, 2010, ஞாயிறு அன்று கொலம்பியா, மேரிலாந்தில் உள்ள மைய நூலகத்தில் (10375, Little Patuxent Pkwy, Columbia, MD 21044) நடைபெற இருக்கிறது. அனைவரும் விழாவிற்கு வருகை தந்து சிறப்பிக்க வேண்டுகிறோம்.

நிகழ்ச்சி நிரல்

2.00-2.05
தமிழ்த்தாய் வாழ்த்து

2.05-2.10
வரவேற்புரை
முனைவர் முத்துவேல் செல்லையா அவர்கள்

2.10-2.35
புறநானூறு காட்டும் சங்க காலத் தமிழகம்
முனைவர் ஃப்ரான்சிஸ் முத்து அவர்கள், சிகாகோ

2.35-3.00
புறநானூறு கூறும் வாழ்வியல் கருத்துகள்
உயர்திரு. கு.பெ.வேலுச்சாமி அவர்கள், தமிழாசிரியர், கோவை.

3.00-3.25
புறநானூறு காலத்துப் புரவலரும் புலவரும்
முனைவர் இர.பிரபாகரன் அவர்கள்

3.25-3.45
தேனீர் இடைவேளை

3.45-4.05
செந்தமிழ்க் காவலர் பேராசிரியர் இலக்குவனார்
முனைவர் அரசு செல்லையா அவர்கள்

4.05-4.25
தன்மானத் தமிழ் மறவர் இலக்குவனார்
பதிவர் பழமைபேசி (எ) மெளன.மணிவாசகம் அவர்கள்

4.25-5.25
புறநானூறு - வினா விடை விளக்கம் (பல்லூடக நிகழ்ச்சி)

கருத்தாக்கம்
உயர்திரு. நாஞ்சில் பீற்றர் அவர்கள்

பாவாணர் அணி
தலைவர் உயர்திரு.கொழந்தைவேல் இராமசாமி அவர்கள்

இலக்குவனார் அணி
தலைவி முனைவர் ஜெயந்தி சங்கர் அவர்கள்

5.25-5.30
நன்றி நவிலல்
திருமதி. கல்பனா மெய்யப்பன் அவர்கள்


அனைவரும் வருக!
ஆதரவு தருக!!

தமிழால் இணைந்து
தமிழராய் வளர்ந்திடுவோம்!