Thursday, November 25, 2010

மழையும் மலையும்!!



கோவைக் குற்றாலம், திருமூர்த்தி பஞ்சலிங்க அருவி, மூணாறு... எனக்குத் தெரிஞ்சே ஒரு ஆயிரம் பேராவது இது போல ஏமாந்து இருப்பாய்ங்க. பொன்னாலம்மன் சோலையில இருக்கிற எங்க சின்னம்மாவிங்க தோட்டத்துக்கு போறப்பவெல்லாம், இது போல எதோ ஒரு சேதி வந்துட்டே இருக்கும்.

அரசும் கொஞ்சம் சிரத்தையோட இருக்கலாம்... அதுக்கும் மேல, போற நம்ம ஆட்கள், உள்ளூர்வாசிகளைக் கேட்டுட்டு மலை மேல போறது உசிதம்.. மலையும் மழையும் சுலுவுல ஆளை ஏமாத்திடும்னு கிராமத்து வெள்ளந்திக சொல்றது சும்மாவா, என்ன?!.

Monday, November 22, 2010

தோற்கிறேன்!

தோற்றுக் கொண்டு இருக்கிறேன்!
தெரிந்தே
நான் தோற்றுக் கொண்டு இருக்கிறேன்!!

பாதுகாப்பிசம்
நான் தெரிவு செய்த பாதை
நவீன உலகில்
எவரும் மதியாத பாதை...
தோற்றுக் கொண்டு இருக்கிறேன்!
தெரிந்தே
நான் தோற்றுக் கொண்டு இருக்கிறேன்!!

இருப்பின் உறுதி அவசியம் என்றேன்
விடுதலைக்கு எதிரானவனாய்
ஆக்கப்பட்டேன்;
தோற்றுக் கொண்டு இருக்கிறேன்!
தெரிந்தே
நான் தோற்றுக் கொண்டு இருக்கிறேன்!!

அடிப்படையே முதல் என்றேன்
முன்னேற்றத்தின் எதிரியாய்ச்
சித்தரிக்கப்பட்டேன்;
தோற்றுக் கொண்டு இருக்கிறேன்!
தெரிந்தே
நான் தோற்றுக் கொண்டு இருக்கிறேன்!!

வழுவைக் களையவல்லது பழைமை என்றேன்
புதுமையின் தடைக்கல்லென
முன்னிறுத்தப்பட்டேன்;
தோற்றுக் கொண்டு இருக்கிறேன்!
தெரிந்தே
நான் தோற்றுக் கொண்டு இருக்கிறேன்!!

ஆம்; தோற்றுக் கொண்டு இருக்கிறேன்!
தெரிந்தே
நான் தோற்றுக் கொண்டு இருக்கிறேன்!!
தாராளமயத்தின் தாக்கத்தில்
தாக்குப்பிடிக்காது
தோற்றுக் கொண்டு இருக்கிறேன்!

நான் இறந்த பிறகாவது
இருப்பிற்கான உறுதியின் அவசியம்
மெய்ப்படும் எனும் நினைப்பில்
தெரிந்தே தோற்றுக் கொண்டு இருக்கிறேன்!
தெரிந்தே
நான் தோற்றுக் கொண்டு இருக்கிறேன்!!

விதைப்பவன் வீழ்ந்திடினும்
விதைகள் எழும்!!

Sunday, November 7, 2010

நான் யார்?

  • அணுகுவதற்கு இலகுவாய் இருப்பது எளிமைக்கு முதல்படி என நினைப்பவன்.
  • பழையதன்றி, புதியன உயிர்ப்பதில்லை என்பதில் நம்பிக்கை கொண்டவன்.
  • பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாதோர் எனும் அக்கப்போரில் நாட்டமற்றவன்.
  • தமிழில் நாட்டம் கொண்டவன். தமிழ் எழுத்துகள் கொண்டு, தமிழ்ச் சொற்களை எழுத முனைபவன்.
  • சுட்டுவதில் தன்னைச் சுட்டுவதற்கான காரணிகளும் உயிர்க்கிறது என்பதில் ஒப்புமை கொண்டவன்.
  • அறம் கட்டுடைக்கப்படும் போது, நீட்சிகள் எங்கோ, எதோ ஒரு புள்ளியில் கேட்டுக்கு வழி வகுக்கும் என்பதில் இசைந்தவன்.
  • ஒரு சூழலில் பெண்பால் உயர்வானது; பிறிதானதொரு சூழலில் ஆண்பால் உயர்வானது என்பதில் பற்றுடையவன். த்த்தம் தனித்தன்மையை அவை இரண்டும் கொண்டிருக்கின்றன என நம்புபவன்.
  • ஒட்டு மொத்த சமத்துவம் சாத்தியக் கூறுகள் அற்றது; பிரிந்த மணிகள் மாலையாகுமே தவிர, மாலையே மணியாவது இல என்பதில் உறுதி உடையவன்.
  • இணக்கமும் தனித்துவமும் வேறு வேறானவை. அதே வேளையில், அவை இரண்டும் உடலும் உயிரும் போன்றவை என ஏற்றுக்கொண்டவன்.
  • தமிழ் மொழி, பண்பாடு பேணுபவன் எவராயினும் அவர் தமிழர் என்பதில் பற்றுக் கொண்டவன்.
  • சாதிக் கணக்கெடுப்பில் உடன்பாடற்றவன்.
  • இட ஒதுக்கீடு என்பது படிப்படியாக இல்லாதிருத்தல் வேண்டும் என எண்ணுபவன்.
  • விவாதம் என்பது வினவுதலும் விடையளித்தலுமே அன்றி, வெட்டிப் பேசுதல் அன்று என எண்ணுபவன்.